Monday, January 27, 2014

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

     
சினிமா திரைப்படங்களில் கூட இப்படி ஒரு திருப்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் குடியா என்ற இளம் பெண்ணுக்கு நேரிட்டது. பிறகு அதுவே சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

கார்கில் போரில் கைதான இந்திய ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அதாவது 2005ஆம் ஆண்டு குடியா பற்றிய செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்திய எல்லையில் எத்தனையோ போர்களில் வீரர்கள் இறக்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் கைதிகளாக பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். அதுபோன்றவை வெறும் செய்திகளாகவே நம்மை அன்றாடம் கடந்து செல்கின்றன. ஆனால், கார்கில் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இங்கே.

கடந்த 1999ஆம் ஆண்டு சிறுமி குடியாவுக்கு ராணுவத்தில் பணியாற்றிய ஆரிப்புடன் திருமணம் நடந்தது. ஆரிப்புடன் 10 நாட்களே வாழ்ந்த நிலையில், ராணுவத்தில் இருந்து அவசர அழைப்பு வந்து ஆரிஃப் பணிக்குத் திரும்பினார்.

பாகிஸ்தான் ராணுவத்துடனான கார்கில் போரில் ஆரிப் காணாமல் போகிறார். அவர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கும் ஆரிப் காணாமல் போனது குறித்து செய்தி வருகிறது. அழுது புலம்பியது குடும்பம்.

சுமார் 4 ஆண்டுகள் விதவையாக ஆரிப்பின் வீட்டிலேயே இருந்த குடியா, அவரது மாமியார் காலமானதும், ஆரிப்பின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியால் சித்ரவதைக்குள்ளாகி பிறந்த வீட்டுக்கே திரும்பினார். குடியாவின் தாய் இறந்த நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தார். பிறந்த வீட்டில் சித்தியின் கொடுமைக்கு ஆளான குடியாவை, அவரது தூரத்து உறவினர் தஃபிக்குக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். முதல் வாழ்க்கையை ஒரு கனவாக மறந்து தனது இரண்டாவது வாழ்க்கையை இனிதே துவக்கினார் குடியா. தஃபிக் வீட்டில் குடியாவை நன்கு கவனித்துக் கொண்டனர்.

கணவருடன் இல்லறம் நடத்திய குடியா கர்ப்பிணி ஆனார். அந்த சந்தோஷத்தில் குடும்பத்தார் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களுக்கு ஒரு பேரிடியாக செய்தி வந்து சேர்ந்தது.

அதாவது, போரில் இறந்ததாகக் கருதப்பட்ட ஆரிப், பாகிஸ்தான் சிறையில் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பினார் என்று. இதனால், ஆரிப்பின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.

குடியாவின் குடும்பத்தாருக்கு பிரச்னை ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் ஆரிப் தனது மனைவியைப் பற்றி கேட்டார். அவருக்கு திருமணமானதும், தற்போது கர்ப்பிணியாக இருப்பதையும் அறிந்த ஆரிப், தனது மனைவி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறக்கும் குழந்தையை இரண்டாவது கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னுடன் குடியா வந்து வாழ வேண்டும் என்று கூறினார்.

ஆனால், குடியாவோ தனது குழந்தையை இழக்க விரும்பவில்லை. எனினும், அவளது பேச்சுக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. குடியா, முறைப்படி தனது முதல் கணவருடன் தான் வாழ வேண்டும் எனக் கூறி சில உறவினர்கள் மற்றும் ஆரிப்பின் ஊர்க்காரர்களால் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தஃபிக்கிடம் கொடுக்கப்பட்டது. குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் சில காலத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டார் குடியா. பிறகு சில கருச் சிதைவுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து இறுதியில் மரணத்தை தழுவினார்.

ஒரு பெண்ணாகப் பிறந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, சமூகம், குடும்ப உறவுகளால் நசுக்கப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடியாவைப் பற்றி 'கஹானி குடியா கி' (குடியாவின் கதை) என்ற ஹிந்தி திரைப்படமும் வெளி வந்தது.

இதுபோன்று எத்தனையோ குடியாக்கள் நம் நாட்டில் வெளிச்சத்துக்கு வராமலேயே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு வழி?

No comments:

Post a Comment